×

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறையின் முக்கிய விதிமுறைகள்


சென்னை: இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாடப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகள் நிறுவும் நாளில் தமிழ்நாடு முழுவதும் 74,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. முக்கியமான ஊர்வலங்களில் கண்காணிப்பு பணிக்காக ட்ரோன்கள் மற்றும் Mobile CCTV கேமராக்கள் உபயோகப்படுத்தப்பட உள்ளன.

மேலும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடங்கள் SMART KAVALAR செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு GPS உதவியுடன் ரோந்து காவலர்களால் தணிக்கை செய்யப்படும். விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கும் மற்றும் அவற்றினை நீர் நிலைகளில் கரைப்பதற்கும் மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு நிலை ஆணை எண்.598, பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறை, நாள் 09.08.2018 ஆகியவற்றை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டப்படுகிறது.

முக்கிய விதிமுறைகள்:

* நிறுவப்பட இருக்கின்ற சிலைகள் களிமண்ணால் மட்டும் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்ட்ர் ஆப் பாரிஸ் மற்றும் வேதிப்பொருட்கள் கொண்டு செய்யப்பட்டிருக்கக் கூடாது. ஏற்கனவே வாங்கி நிறுவப்பட்ட சிலைகளை பொருத்தவரையில் அவற்றை பொது நீர் நிலைகளில் கரைக்கக்கூடாது. இது தொடர்பாக W.P(MD),No.22892/2023 மற்றும் W.A(MD).N0.1599/2023 ஆகியவற்றில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவுகளின் அடிப்படையில் நடந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

* சிலையின் உயரம் பீடம் உட்பட 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* சிலைகளானது வேற்று மத வழிபாட்டு தலங்கள், மருத்துவ மனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் நிறுவப்பட கூடாது.

* விழா அமைப்பாளர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு பந்தல் அமைப்பதை தவிர்த்திடல் வேண்டும்.

* விழா அமைப்பினைச் சேர்ந்த இருவர் 24 மணி நேரமும் சிலைப்பாதுகாப்பில் ஈடுபட வேண்டும்.

* சிலைக் கரைப்பு ஊர்வலமானது அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாகவும் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மூலமாகவும் மட்டுமே எடுத்துச்செல்லப்பட வேண்டும்.

* விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் ஊர்வல வழித்தடங்கள் மற்றும் சிலைக் கரைப்பு இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

* விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது மத துவேச டங்கப் கோஷங்களை எக்காரணத்தை முன்னிட்டும் எழுப்பக் கூடாது.

* ஒலிபெருக்கிகள் காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது.

* விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

* விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக காவல்துறை உதவி தலைவர், சட்டம் மற்றும் ஒழுங்கு, சிறப்பு அதிகாரியாக (Nodal Officer) நியமிக்கப்பட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி தொடர்பான விளக்கங்கள் மற்றும் தகவல்களுக்கு 04428447701 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

* விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது பொது மக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமலும் அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற அமைப்பாளர்களும் பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு காவல்துறையின் விதிமுறைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறையின் முக்கிய விதிமுறைகள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu police ,Vinayakar Chaturti Festival ,Chennai ,Vinayakar Chaturthi Festival ,Tamil Nadu ,Speaker Chadurthi Festival ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...